பிகில் ட்ரெய்லர் வெளியாகி ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே ஒரு மில்லியன் லைக்ஸைப் பெற்று சாதனைப் படைத்துள்ளது.

vijay bigil trailer,vijay,atlee,bigil trailer

விஜய்-அட்லி கூட்டணியில் உருவாகியுள்ள மூன்றாவது திரைப்படமான பிகிலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியிருந்தது. படத்தில் முதல் லுக்குடன் படத்தின் பெயரும் அறிவிக்கப்பட்டதிலிருந்தே எதிர்பார்ப்பு எகிறத் தொடங்கியது. தீபாவளிக்கு பிகில் வெளிவரவுள்ளநிலையில், டீசர் தாமதமானது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தினாலும், தற்போது மாஸாக வெளிவந்திருக்கும் ட்ரெய்லர் ரசிகர்களைக் குஷிப்படுத்தியுள்ளது.

மூன்று பரிமாணத்தில் பயணிக்கும் அட்லி… தெறியில் விஜய்க்கு ஒரு கதாப்பாத்திரம் என்றாலும் அந்த கதாபாத்திரம் மூன்று பரிமாணங்களில் பயணிக்கும். அதேபோல, மெர்சலில் விஜய் மூன்று கதாபாத்திரங்களிலேயே நடித்திருப்பார். தற்போது பிகிலில், விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்பது உறுதியாகியிருந்தநிலையில், தற்போது மூன்று கதாபாத்திரங்களா என்ற ஆர்வத்தை ரசிகர்களிடம் தூண்டியுள்ளது பிகில் ட்ரெய்லர்.

ட்ரெய்லரில் அப்பா விஜயாக வரும் ராயப்பன், கதாபாத்திரம் இந்த பெருமையெல்லாம் யாரால.. ராயப்பனாலயா? மைக்கலாலயா? இல்ல பிகிலால…? என்று கூறுகிறார். அதனால், ரசிகர்களுக்கு பிகில் படத்தில் மூன்று கதாபாத்திரங்கள் இருக்கலாம் என்று ஆர்வம் எழுந்துள்ளது. மெர்சலிலும் இரண்டு கதாபாத்திரங்கள்தான் என்று படம் வெளியாகும் வரை நினைத்துக் கொண்டிருந்தநிலையில், படம் பார்த்த ரசிகர்களுக்கு மூன்றாவதாக ஒரு விஜய் வந்து ஷாக் அளித்தார். அப்படி ஒரு ட்விஸ்ட் இதிலும் எதிர்பார்க்கலாமா? என்று கேட்டால்.. அதற்கு படக்குழு காத்திருங்கள்.. என்று பதிலளிக்கும்.. அதனால், காத்திருப்போம்…

காதல் காட்சிகளை காமெடியுடன் ரசிக்கும் படி காட்சிப்படுத்துவதில் அட்லி கில்லாடி. அந்த வகையில் அட்லியின் கடந்த படங்களில் விஜயுடன் சேர்ந்து சமந்தா, நித்யா மேனன் காதலோடு காமெடியிலும் கலக்கியிருந்தனர். பிகில் ட்ரைலரில் நயன்தாராவுக்கு இரண்டு காட்சிகள் மட்டும் இருந்தாலும், அந்தக் காட்சிகள் ரொமேன்ஸும், காமெடியும் நிச்சயம் என்பது உறுதிப்படுத்துகிறது. யோகிபாபுவை நயன்தாரா அண்ணன் என்று அழைக்கும் காட்சிக்கு திரையில் விசில் சத்தம் பறக்கப் போவது உறுதி… ’எனக்கு இப்போ கல்யாண வயசுதான் வந்துடுச்சுடி..’ பாடலை யாரும் மறந்திருப்பார்களா என்ன?

இரவு விளக்குகள் வெளிச்சத்தில் நுன்ஜாக் சுத்தும் விஜய், காரில் கத்தியுடன் ஸ்டைலாக இறங்கும் வயதான விஜய், பைக்கில் நூறு கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் விஜய், பைக்கில் ஸ்டென்ட் செய்யும் ஃபைட்டர்ஸ், இரவு வெளிச்சத்தில் மெரினா நேப்பியர் பாலத்தில் ஒற்றைக் கையில் பைக்கைச் சுற்றும் விஜய் என ரசிகர்களை ஆரவாரமாக்க கலக்கலான சண்டைக் காட்சிகள் என ட்ரெய்லரில் அசத்துகின்றன. ஆனால், ட்ரைலரில் வந்த சண்டைக் காட்சிகள் அனைத்தும் இரவு நேரத்திலேயே இருந்தன. தெறி, மெர்சலிலும் இடைவேளைக்கு முன்னர் வரும் முக்கியமான சண்டைக் காட்சிகள் இரவு நேரத்தில்தான் இருந்தன.

சென்டிமெண்ட் காட்சிகள் இல்லாத அட்லியா…? வாய்ப்பே இல்லை… ட்ரைலரில், பெண் கால்பந்து அணியில் உடல் பருமனாக இருக்கும் பெண் வருந்துவதும், ஏழைப் பெண் வருந்துவதும் போன்ற காட்சிகளும் வசனங்களையும் உணரமுடிகிறது. அதனால், இந்தப் படங்களிலும் சென்டிமெண்ட் காட்சிகள் நிச்சயம். மனம் இலகுவானவர்கள் கைக்குட்டைகள் வைத்திருப்பது நல்லது என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வந்துள்ளன.

படத்தில் தந்தை விஜய்க்கான பஞ்ச் வசனங்கள் மட்டுமே ட்ரைலரில் வருகின்றன. பிகிலின் அதிரிபுதிரியான ஃபுட்பால் காட்சிகளும், பெண்கள் ஃபுட்பால் போட்டிக்கு தயாராகும் காட்சிகளும் ட்ரைலரின் பிரதான காட்சிகளாக இடம்பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்துகின்றன. விஜயின் ரசிகர்கள் படம் எப்படி இருந்தாலும் கொண்டாடித் தீர்ப்பார்கள்… ஆனால், அதைக்கடந்து அட்லி-விஜய் காம்போவுக்கு ஒரு ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இதுவரையில் வெளிவந்த அட்லியின் படங்கள் அனைத்தும் அனைத்து தரப்பு மக்களாலுமே கொண்டாடப்பட்டுவந்தன. இந்தப் படமும் அப்படி இருக்கும் என ட்ரெய்லர் ஆருடம் கூறுகிறது.

இரவு பொழுதொன்றில் அப்பா விஜய் பழைய அம்பாசிட்டர் காரில் இருக்கும்போது, கத்தியுடன் சுற்றிவளைக்கும் ரவுடிகள் ’பெருசு ஒத்தையா சிக்கிடுச்சு..’ என்று விஜயை நெருங்கும் போது, அவர் காரிலிருந்து இறங்குகிறார்…. அந்த சண்டைக் காட்சிக்கு எழும் விசில் சத்தம் சில நிமிடங்கள் நீடிக்கும் என்பது உறுதி…

வெற்றி கோப்பையை கையிலேந்தும் தருணத்துக்கேற்ற இசையை ட்ரெய்லர் முழுக்க உணர முடிகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை முக்கியத் தருணங்களை மெய்சிலிர்க்க வைக்கும் என்று உறுதியாக நம்பலாம்.. விவேக்கும், யோகி பாபுவும் படத்தின் காமெடியை உறுதிப்படுத்துவார்கள் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.

பிகிலின் ட்ரைலரை பார்க்கும்போது, படத்தின் கதையை இப்படி யூகிக்க முடிகிறது…

புட்பால் வெறியரான மைக்கெல் என்ற பிகில் விஜயின் தந்தை ராயப்பன். அவர், வடசென்னையில் மக்கள் தலைவராக இருக்கிறார். ராயப்பன் விஜயின் முயற்சியால் மைக்கெல் விஜய் பல நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்திய அணியில் இடம் பெறுகிறார். பின்னர், அவரே இந்திய அணியின் பயிற்சியாளராக மாறி, பெண்கள் அணியை தலைநிமிர வைக்கிறார்… இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் இந்திய பெண்கள் அணிக்கு கைத் தட்டிய படியே சிங்கப் பெண்ணே பாடலை கேட்டுக் கொண்ட நாம் திரையரங்கை விட்டு வெளியேறத் தயாராக இருக்கலாம்.

படத்தின் திரைக்கதை அமைப்பை இப்படி யூகிக்க முடிகிறது…

படத்தின் தொடக்கத்திலேயே, இந்திய பெண் அணிக்கு பயிற்சியாளராக இருக்கும் மைக்கேல் விஜய்க்கும், அணியின் ஒரு வீராங்கனையான இந்துஜாவுக்கும் இடையே சில மோதல்கள் ஏற்படுகின்றன. அதையும் கடந்து, மைக்கேல் பெண்கள் அணிக்கு சிறந்த பயிற்சி அளிக்கிறார். இருப்பினும், இந்துஜாவுக்கு மைக்கேல் மீதான கோபம் குறையவேயில்லை. ஒருகட்டத்தில் பொறுமையிழந்த இந்துஜா ‘ஒரு ரவுடிக்கும் ஸ்போர்ஸ்மேனுக்கும் என்னங்க சம்மந்தம்’ என்று ஆதங்கப்படுகிறார். அப்போது, மைக்கேலின் முன்கதை(ராயப்பன் கதையும், பிகில் மைக்கேல் ஆன கதை) குறித்து மொத்த பெண்கள் அணியும் அறிந்து கொள்ள நேர்கிறது. அதன்பின், அவர்கள் இன்னும் உத்வேகம் கொண்டு இந்திய கால்பந்து அணி கோப்பை வெல்ல பல்வேறு இடையூறுகளையும் தாண்டி வெறிகொண்டு விளையாடி கோப்பையை பெற்றுத் தருகிறார்கள்.. படம் இறுதியில் சிங்கப் பெண்ணே பாடலும் ஏ பிலிம் பை அட்லியும் திரையை அலங்கரிக்கும் என்பது நிச்சயம்…