இளையராஜா

                      இளையராஜா (Ilaiyaraaja, பிறப்பு: சூன் 2, 1943) இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர் ஆவார். இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 1000 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கு, இந்திய அரசின் படத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான, பத்ம பூஷண் விருது 2010 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

இளையராஜாவுக்கு, இந்திய நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது, 25 சனவரி 2018 அன்று, இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது.

தமிழக நாட்டுப்புற இசை, கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில், புலமையும், முறையான பயிற்சியும் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். திரைப்படங்களுக்கான சிறந்த பின்னணி இசையமைப்புக்கும் பெயர் பெற்றவர்.