தர்பார் படத்தை அடுத்து ரஜினிகாந்தின் 168-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தை விஸ்வாசம் பட இயக்குநர் சிவா இயக்குகிறார். விஸ்வாசம் படத்தை அடுத்து நடிகர் சூர்யாவை வைத்து படம் இயக்க இருந்த சிவா, தற்போது ரஜினியின் 168-வது படத்தை இயக்க உள்ளார்.

டி.இமான் இசையமைக்கும் இந்தப் படத்தில் நகைச்சுவை நடிகர் சூரி இணைந்துள்ளார். இது அவருக்கு ரஜினியுடன் நடிக்கும் முதல் படம். இந்தப் படத்தின் நாயகிகள் குறித்து அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி நடிகை கீர்த்தி சுரேஷ் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருந்த நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது முதன்முறையாக ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கிறார். அவர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிக்கிறாரா அல்லது முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என்பதை படக்குழு உறுதிப்படுத்தாத நிலையில் அவரது கேரக்டர் குறித்து ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ், “என்னுடைய பயணத்தில் இந்த மைல்கல்லை எட்டியிருப்பது மிகவும் மகிழ்ச்சி. நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து நடிப்பது என் வாழ்வில் மறக்கமுடியாதது. இயக்குநர் சிவா மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.

முன்னதாக ‘நெற்றிக்கண்’ படத்தில் கீர்த்தியின் தாயார் மேனகா ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Keeerthy Suresh,Keerthy