அஜித் பட பாடலை பாடி குழந்தையை தாலாட்டிய சீன தொகுப்பாளினி!

சீனாவை சேர்ந்த தொலைக்காட்சி தொகுப்பாளினி நிலானி குறித்து ஏற்கனவே பலர் அறிந்திருப்பார்கள். நம்ம ஊரு தொகுப்பாளினிகள் போல், கொஞ்சு தமிழில் பேசி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் நிலானி வல்லவர். இவருடைய பல வீடியோக்கள் சமூக தளங்களில் வைரல் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக நிலானி தொகுப்பாளினியாக இல்லை. இதனையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ’நிலானி எங்கே என்று பலர் கேள்வி கேட்டனர். அதற்கு நான் தற்போது விடை தருகிறேன். அதற்கு முன் நான் உங்களுக்கு ஒருவரை அறிமுகம் செய்கிறேன். அவர்தான் என்னுடைய குழந்தை. எனக்கு குழந்தை பிறந்ததால் தான் நான் விடுமுறை எடுத்து உள்ளேன். அதனால் தான் தொகுப்பாளினி வேலைக்கு வரவில்லை என்று கூறினார்.

மேலும் என்னுடைய குழந்தைக்கு ’சியாவ் மன்’ என்ற பெயர் வைத்துள்ளேன். தமிழிலும் அவருக்கு ஒரு பெயர் வைக்க விரும்புகிறேன். ஒரு நல்ல தமிழ் பெயரை எனக்கு அறிமுகம் செய்யுங்கள். அதற்கான அர்த்தத்தையும் எனக்கு கூறுங்கள் என்று நிலானி அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

அதன் பிறகு குழந்தையை கையில் தூக்கி வைத்துக்கொண்டு அஜித்தின் ’விஸ்வாசம்’ திரைப்பட பாடலான ’கண்ணான கண்ணே’ என்ற பாடலை பாடி குழந்தையை தாலாட்டினார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. அஜித்தின் விஸ்வாசம்’ படப்பாடல் உள்ளூரில் மட்டுமின்றி சீனா வரை புகழ் பெற்றுள்ளது என்பது இதன்மூலம் உறுதியாகியுள்ளது.