குடியரசு தின விழாவின் போது டெல்லி ராஜ் பாதையில் ஆண்டுதோறும் கோலாகலமாக அணிவகுப்புகள் நடைபெறும்.

  1. குடியரசு தினம் என்றால் என்ன?
    இந்திய அரசியலமைப்புச் சட்டம் செயலாக்கத்திற்கு வந்த நாள், குடியரசு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ஜனவரி 24ம் தேதி 1950ம் ஆண்டு 308 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்பதுலுடன் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட அரசியலமைப்பு கையெழுத்திடப்பட்டது.
  2. எப்போதிருந்து குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது?
    விடுதலை பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே மகாத்மா காந்தி ஏற்படுத்திய விடுதலை நாளான ஜனவரி 26ம் தேதி, மக்களாட்சி மலர்ந்த நாளாகக் கொண்டாட, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தலைமையிலான அமைச்சரவை முடிவு செய்தது. அதன்படி 1950ம் ஆண்டு முதல் குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.
  3. குடியரசு தினம் கொண்டாடும் முறை?
    தேசிய தலைநகர் டெல்லியில், குடியரசுத் தலைவர் மூவர்ணக் கொடியை ஏற்றி இந்திய படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வார். பின்னர், சிறப்பாக பணியாற்றிய வீரர்களுக்கு பதக்கங்களையும் வழங்குவார். மாநிலங்களில், அந்ததந்த மாநில ஆளுநர் கொடியேற்றி காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வார். பின்னர் வீரதீர செயல்புரிந்த காவலர்களுக்கு பதக்கங்களையும் வழங்குவார்
  4. குடியரசு தினத்திற்கும் சுதந்திர தினத்திற்கும் உள்ள வேறுபாடு?
    சுதந்திர தினம் என்று சொல்லும் போது, யாரிடம் இருந்தோ விடுதலை பெற்றிருக்க வேண்டும் என்பதை குறிக்கிறது. 1947 ஆக., 15ம் தேதி நள்ளிரவில் ஆங்கிலேயர் நமக்கு வழங்கியது தான் சுதந்திரம். நமக்கு அப்போது கிடைத்த சுதந்தரம் முழுமையானது அல்ல. ஏனெனில் சுதந்திரம் பெற்ற போது, பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து தான் வழங்கியது. அதன்படி பிரிட்டிஷார் சார்பில் நியமிக்கப்பட்ட கவர்னர் ஜெனரல் தான் நாட்டின் தலைவராக இருந்தார். இதன் பின் இந்திய அரசியலமைப்பு 1949 நவ., 26ல் இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டு 1950 ஜன., 26ல் நடைமுறைக்கு வந்தது. அதுதான் குடியரசு தினம்