நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ள ப்ராஜெக்ட் பவர் விக்ரமின் இருமுகன் ரீமேக்கா? – தயாரிப்பாளர் விளக்கம்

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘இருமுகன்’. இந்தப் படத்தில் விக்ரம் ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்து அசத்தியிருப்பார். ஸ்பீட் என்கிற போதைப் பொருளை உட்கொண்டால் புதிய சக்தி கிடைப்பது போன்றும், தீவிரவாதிகளுக்கு இந்த போதைப்பொருளை வில்லன் விற்பது போன்றும் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும்.

தமிழைத் தவிர வேறு எந்த மொழியிலும் இன்னும் இந்தப் படம் ரீமேக் செய்யப்படாத நிலையில், சமீபத்தில் வெளியான ‘ப்ராஜெக்ட் பவர்’ என்ற ஹாலிவுட் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி அதன் கதையம்சம் ‘இருமுகன்’ படத்தைப் போன்றே அமைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதனால் நெட்ஃபிலிக்ஸில் வெளியான ஜேமிஃபாக்ஸ்ஸின் ‘ப்ரொஜெக்ட் பவர்’ என்ற படம் ‘இருமுகன்’ படத்தின் தழுவல், ரீமேக் என சமூகவலைதளங்களில் தகவல் பரவியது.

இதைக் கவனித்த ‘இருமுகன்’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் தமீன்ஸ் ஃபிலிம்ஸ் இதுகுறித்து தங்களது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளது.

அதில், “‘இருமுகன்’ படத்தின் சர்வதேச ரீமேக் உள்ளிட்ட எந்த உரிமையையும் யாருக்கும் நாங்கள் விற்கவில்லை. இந்தத் தகவல் சமூக வலைதளத்தில் பரவும் குழப்பத்தையும், நெட்ஃபிலிக்ஸின் ‘ப்ராஜக்ட் பவர்’ உடனான ஒப்பீட்டையும் நிறுத்தும் என்று நம்புகிறோம்” என்றும் தகவல் தெரிவித்துள்ளது.

Thameens Flim Tamil