அனுராதா ஸ்ரீராம்

 (பிறப்பு: 9 ஜூலை 1970), தமிழகத்தைச் சார்ந்த இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி மற்றும் கருநாடக இசைக் கலைஞர் ஆவார். இவர் 90-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தித் திரைப்படங்களில் பாடியுள்ளார். அனுராதா ஸ்ரீராம், மீனாட்சி சுந்தரம் -ரேணுகா தேவி தம்பதியின் மகளாகப் பிறந்தார். அம்மா பின்னணிப் பாடகியாக இருந்தவர். ‘கந்தன் கருணை’யில் ‘ஆறுமுகமான பொருள்…’ பாடலில் சூலமங்கலம் ராஜலட்சுமியுடன் இணைந்து ஒலிக்கும் குரல் அவருடையதுதான். அனுராதா தனது 6வது வயதிலேயே இசைப்பயிற்சியைத் தொடங்கிவிட்டார். இவர்,. ‘காளி’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார் இவர். 12 வயது வரை இந்தியாவின் பல பகுதிகளிலும், அமெரிக்காவிலும் இசை நிகழ்ச்சிகள் மற்றும் வானொலி, தொலைக்காட்சிகளில் கச்சேரி செய்தார். தஞ்சாவூர் எஸ். கல்யாணராமன், டி. பிருந்தா, பண்டிட் மணிக்பா தாகூர்தாஸ் ஆகியோரிடம் சங்கீதம் கற்றவர் இவர். நியூயார்க்கில் பேராசிரியர் ஷிர்லி மீயரிடம் ஓபெரா இசையைக் கற்றார். சென்னை ராணி மேரி கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்பின்போது தங்கப்பதக்கம் வாங்கியவர்.