மதுரை

(Madurai), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு தொன்மையான நகரம் ஆகும். இது, மதுரை மாவட்டத்தின் தலைநகர் ஆகும். இந்நகரம், மக்கள் தொகை அடிப்படையில், தமிழகத்தின் நான்காவது பெரிய நகரமாகும். இந்தியாவில், பத்து இலட்சத்துக்கு மேல் மக்கட்தொகைக் கொண்ட இந்திய மாநகரங்களின் பட்டியலில், இது 44 ஆவது பெரிய நகரம் ஆகும். வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள மதுரை நகரம், இங்கு அமைந்துள்ள மீனாட்சியம்மன் கோவிலுக்காக அதிகம் அறியப்படுகிறது. நகரின் உள்ளாட்சி நிர்வாகம் மதுரை மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்திய துணைக்கண்டத்தில், தொன்மையான வரலாற்றைக் கொண்ட மதுரை நகரம், சுமார் 2500 ஆண்டுகள் பழமையான, தொடர்ந்து மக்கள் வசித்து வரும் உலகின் சில நகரங்களுள் ஒன்று. பாண்டிய மன்னர்களின் தலைமையிடமாக விளங்கிய மதுரை, தமிழ் மொழியுடன் நெருங்கிய தொடர்புடையது. சங்க காலம் எனக் குறிக்கப்படும் கி.மு. 4 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில், தமிழ் மொழி அறிஞர்களைக் கொண்டு மூன்றாம் தமிழ்ச் சங்கம் அமைக்கப்பட்டு, தமிழை வளர்த்த பெருமையுடைய நகரம் மதுரை.

மௌரியப் பேரரசின் அமைச்சர் கௌடில்யர் (கி.மு. 370 – கி.மு. 283), கிரேக்க தூதர் மெகஸ்தெனஸ் (350 கி.மு. – 290 கி.மு.) ஆகியோரின் குறிப்புக்களில் மதுரை குறிப்பிடப்பட்டுள்ளது. மரபுச் சின்னமாகப் பார்க்கப்படும் மதுரை நகரம், பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. சங்ககாலப் பாண்டியர், இடைக்காலச் சோழர்கள், பிற்காலச் சோழர்கள், பிற்காலப் பாண்டியர்கள், மதுரை சுல்தானகம், விஜயநகரப் பேரரசு, மதுரை நாயக்கர்கள், கர்நாடக இராச்சியம், ஆங்கிலேயர்கள் போன்றோர் மதுரையை ஆண்டுள்ளனர்.

நகரத்தில் பல வரலாற்று நினைவிடங்கள் அமைந்துள்ளன. மீனாட்சியம்மன் கோவில், திருமலை நாயக்கர் அரண்மனை போன்றவை அவற்றில் புகழ் பெற்றவை. நகரில், ஆண்டு முழுவதும் பல கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. சித்திரைத் திருவிழா என்று பொதுவாக அழைக்கப்படும் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் ஆண்டுதோறும் 10 நாட்கள் கொண்டாடப்படும் நகரின் முக்கிய விழாவாகும். பத்து இலட்சம் பேராற் கண்டுகளிக்கப்படும் சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதியாக கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடைபெறுகிறது. நகரின் ஒருபகுதியான அவனியாபுரம் பகுதியில், பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெறும் ஏறுதழுவல், நகரின் அருகே உள்ள அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் நடைபெறும் ஏறுதழுவல் நிகழ்ச்சிகள், பெயர் பெற்ற நிகழ்வுகளாகும்.

மதுரை, தென் தமிழகத்தின் முக்கிய தொழிற்றுறை மையமாகவும், கல்வி மையமாகவும் திகழ்கிறது. இரப்பர், இரசாயனம், கிரானைட் போன்ற உற்பத்தித் தொழில்கள் மதுரையில் நடைபெறுகின்றன. தகவல் தொழில்நுட்பத் துறையில், இரண்டாம் அடுக்கு நகரமாகப் பட்டியலிடப்பட்டுள்ள மதுரையில் சில பன்னாட்டு, உள்நாட்டு மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் அமைந்துள்ளன. மதுரை மருத்துவக்கல்லூரி, ஓமியோபதி மருத்துவக் கல்லூரி, மதுரை சட்டக் கல்லூரி, வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் போன்ற அரசு கல்வி நிலையங்கள் நகரில் அமைந்துள்ளன. நகர நிர்வாகம், 1971 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட மாநகராட்சி அமைப்பின் மூலம் நடைபெறுகிறது. இது சென்னைக்கு அடுத்த இரண்டாவது பெரிய மாநகராட்சி ஆகும். மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளையும் இங்கு உள்ளது. இது இந்தியாவில், மாநிலத் தலைநகரங்களுக்கு வெளியில் உள்ள நீதிமன்றங்களில் ஒன்றாகும். மதுரையில், பன்னாட்டுச் சேவைகளை வழங்கும் வானூர்தி நிலையமும், தென் மாவட்டங்களில் பெரிய தொடர்வண்டி நிலையமும் அமைந்துள்ளது. முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளால் மதுரை நகரம் இணைக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் தென்னிந்தியாவின் மாசில்லா மாநகரமாக மதுரை மாநகர் தெரிவு செய்யப்பட்டது.

மதுரை 147.99 கி.மீ.2 பரப்பளவு கொண்டது. 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் முதற்கட்டத் தகவலின் படி, மதுரை நகரில் 1,017,865 பேர் வசிக்கின்றனர்[