மூணாறு

கேரளத்தின் தென் மாவட்டமான இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய நகரம் ஆகும். கடல் மட்டத்திலிருந்து 1600–1800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. மூணாறு தென்னகத்து காஷ்மீர் என அழைக்கப்படுகிறது. மூணாறு நகரமும், அதைச் சுற்றியுள்ள சுற்றுலா இடங்களும் சேர்ந்தே மூணாறு என அழைக்கப்படுகிறது. தேயிலை உற்பத்தியே இங்குள்ள முக்கியமான தொழில் ஆகும். முதிரப்புழை, நல்லதண்ணி, குண்டலை ஆகிய 3 ஆறுகள் கூடுமிடமாதலால், மூன்றாறு என்றிருந்து மூணாறாகியுள்ளது. உலக மக்களைக் கவரும் தேயிலைத் தோட்டங்களும் இயற்கை எழில் கொஞ்சும் கண்கவர் முகில்களும், வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளும் கண் கொள்ளாக் காட்சியாகும். உதகமண்டலம், கொடைக்கானலிற்குப் பிறகு, தீபகற்ப இந்தியாவில் உள்ள மூன்றாவது புகழ்பெற்ற கோடை வாழிடம் மூணாறு. இந்நகரின் பெரும்பான்மையான மக்கள் தோட்டத் தொழிளாலர்களான தமிழர்கள் ஆவர்.